உள்ளூர் செய்திகள்

'தி கேரளா ஸ்டோரி' படம் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு: டி.ஜி.பி. சைலேந்திரபாபு

Published On 2023-05-05 07:57 IST   |   Update On 2023-05-05 07:57:00 IST
  • இந்த திரைப்படம் இன்று வெளியாகிறது.
  • இந்த படத்தை பார்க்க வருவோர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

சென்னை :

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென் இயக்கத்தில் இன்று வெளியாகும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் முன்னோட்ட 'டீசர்' சமீபத்தில் வெளியானது. இதில் கேரளாவை சேர்ந்த பெண்கள் பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்று காட்சிகள் இடம் பெற்றிருந்தால் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அம்மாநிலத்தில் வலுத்தது.

தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படம் வெளியானால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தமிழக அரசை மாநில உளவுத்துறை அறிவுறுத்தியது. இதையடுத்து இந்த படத்துக்கு தடைகேட்டு சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று தள்ளுபடி ஆனது. இதற்கிடையே இந்த திரைப்படம் இன்று வெளியாகிறது.

இந்த படம் வெளியாகும் தியேட்டர்களின் முன்பு போராட்டங்கள் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

* இந்த திரைப்படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும் போதியளவில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

* இந்த படத்தை பார்க்க வருவோர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

* பதற்றமான பகுதிகளில் போலீசார் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

* இந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வன்முறை ஏற்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* இந்த படத்துக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ போஸ்டர்கள் ஒட்டப்பட்டால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்

* சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பரவுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News