உள்ளூர் செய்திகள்

விசைப்படகுகள் பராமரிக்கும் பணி தீவிரம்

Published On 2023-06-05 09:31 GMT   |   Update On 2023-06-05 09:31 GMT
  • 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
  • துறைமுகத்தில் பல்வேறு பணிகளில் சுமார் 2000 தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு துறைமுகத்தில் விசைப்படகுகள் பராமரிக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பழையாறு துறைமுகம் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 50 விசைப்படகுகள், 450 பைபர் படகுகள் மற்றும் 300 நாட்டு படகுகள் மூலம் 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திலேயே சிறந்த துறைமுகமாக கருதப்படும் இந்த பழையாறு துறைமுகத்தில் பல்வேறு பணிகளில் சுமார் 2000 தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வருடந்தோறும் மீன் இனவிருத்தியை பெருக்கும் வகையில் ஏப்ரல் மாதம் தொடங்கி 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விசைப்படகுகள் 61 நாட்களுக்கு கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடத்துக்கான மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கி வருகிற 14-ந் தேதி முடிவடைகிறது.

இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது விசைப்படகுகளை பழையாறு துறைமுகத்தில் உள்ள படகு அணையும் தளத்திலும், அதனை ஒட்டி செல்கின்ற பக்கிங்காம் கால்வாயிலும் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். தற்போது இந்த தடைகாலத்தில் பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணி மற்றும் புதுப்பிக்கும் பணி, வலை பின்னுதல், வலைகளை பராமரித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்பிடி தடைக்காலத்தினால் மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் பழையாறு துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் கருவாடு காய வைத்தல் மற்றும் பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, 'மீன்பிடி தடைக்காலம் முடிவடைய இருப்பதால் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மீன்பிடி தடைக்காலத்தில் அரசு சார்பில் நிவாரண தொகையாக மீனவ குடும்பத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. மேலும் படகு பராமரிக்க தேவையான உபகரணங்கள், பொருட்களின் விலை உயர்வால் மிகவும் அவதிப்பட்டு உள்ளோம். தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க செல்லும்போது எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றார்.

Tags:    

Similar News