மனைவியை கத்தியால் வெட்டிக்கொன்ற கணவர்- பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
- ரத்த வெள்ளத்தில் சரிந்த முனியம்மாள் கணவர் கண்முன்பே துடிதுடித்து இறந்தார்.
- போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள ஆர்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் புருசோத்தமன். இவரது மனைவி முனியம்மாள் (வயது19). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். புருசோத்தமனின் சொந்த ஊர் சிங்கப்பெருமாள் கோவில் ஆகும். திருமணமான பின்னர் அவர் மனைவியுடன் ஆர்பாக்கம் பகுதியில் தங்கி கூலி வேலைபார்த்து வந்தார். புருசோத்தமனுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் மது குடித்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவும் புருசோத்தமன் மதுபோதையில் வந்தார். மேலும் மதுகுடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதனை மனைவி முனியம்மாள் கண்டித்ததால் மோதல் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த புருசோத்தமன் அருகில் இருந்த கத்தியால் மனைவி முனியம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முனியம்மாள் கணவர் கண்முன்பே துடிதுடித்து இறந்தார்.
இதனை பார்த்து பயந்து போன புருசோத்தமன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
இதற்குள் சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் தப்பி ஓட முயன்ற புருஷோத்தமனை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை மாகரல் போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது அவர்களது 3 குழந்தைகளும் தாய் இல்லாமல் தவித்து வருகின்றனர்.