உள்ளூர் செய்திகள்

ரூ.5 கோடி கேட்டு மளிகை கடை பெண் உரிமையாளர், ஊழியர்களை காருடன் கடத்திய கும்பல்

Published On 2023-01-01 15:31 IST   |   Update On 2023-01-01 15:31:00 IST
  • ரூ. 5 கோடி பணம் கொடுத்தால்தான் உங்களை விடுவிப்போம் என்று கூறி மிரட்டியுள்ளனர்.
  • பணம் கேட்டு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கர்நாடக மாநிலம் ஹொசகட்டா பகுதியில் மாளிகைப்பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருபவர் பிரகாஷ் மனைவி அனுராதா (வயது 36).

இவர் தனது கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் பிரபு, ரவிச்சந்திரன் ஆகியோருடன் காரில் கடந்த 26-ந்தேதி சூளகிரிக்கு வந்து கொண்டிருந்தார்.

சூளகிரி அருகேயுள்ள ஏ.செட்டிபள்ளி ஜாஹீர்பாளையம் என்ற இடத்தருகே அவர்கள் சென்றபோது 7 பேர் கொண்ட மர்ம கும்பல் காரை வழிமறித்து எறியுள்ளனர்.

பின்னர் காரை சேலத்தை நோக்கி விடச்சொன்ன அவர்கள் அனுராதாவிடம் ரூ. 5 கோடி பணம் கொடுத்தால்தான் உங்களை விடுவிப்போம் என்று கூறி மிரட்டியுள்ளனர்.

ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று அனுராதா கூறியுள்ளார்.பின்னர் நீண்ட நேரமாக மர்ம கும்பல் அனுராதாவிடம் பணத்துக்காக மல்லுக்கட்டி உள்ளது. இறுதியாக ரூ.1 லட்சத்தையாவது தங்களது வாங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து அனுராதா தனது வங்கி கணக்கிலிருந்து மர்ம கும்பல் சொன்ன வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்தை அனுப்பியுள்ளார்.

சேலத்திற்கு சென்றதும் ஒரு ஏ.டி.எம்.அருகே காரை நிறுத்த சொல்லி அந்த கும்பல் இறங்கி தப்பி விட்டனர்.

இது குறித்து சூளகிரி போலீசில் அனுராதா புகார் செய்துள்ளார்.அதன்பேரில் பணம் கேட்டு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News