உள்ளூர் செய்திகள்

வனவிலங்குகளின் உடற்பாகங்கள் தீ வைத்து எரிப்பு

Update: 2022-06-30 10:22 GMT
  • கடந்த காலங்களில் இறைச்சி மற்றும் முக்கிய உறுப்புகளை கடத்துவதற்காக வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றது.
  • பல மாதங்களாக சேகரித்து பாதுகாத்து வைத்திருந்த காட்டெருமைகள், மான்களின் எலும்புகள் மற்றும் இறைச்சிகளை விறகுகள் மீது வன ஊழியர்கள் அடுக்கி வைத்தனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதம் வனப்பகுதிகள் உள்ளன. இங்கு காட்டு யானை, காட்டெருமை, மான், புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து கடந்த காலங்களில் இறைச்சி மற்றும் முக்கிய உறுப்புகளை கடத்துவதற்காக வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றது. இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிறைவு பெறும் வரை, அதன் உடற்பாகங்களை பாதுகாத்து வருகின்றனர். இதேபோல் இயற்கையான முறையில் வனவிலங்குகள் உயிரிழக்கும் நிலையில், உடற்கூறு ஆய்வுக்கு பின் அதன் உறுப்புகளை வனத்துறையினர் சேகரித்து வைத்திருந்தனர்.

இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கூடலூர் வன கோட்ட அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) சரவணன், வனச்சரகர்கள் முன்னிலையில் ஓவேலி வனச்சரக பகுதியில் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் எலும்புகள், இறைச்சிகள் உள்ளிட்ட பாகங்களை எரிக்கும் பணி கூடலூர் மாக்கமூலாவில் உள்ள வன அலுவலர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

அதில் பல மாதங்களாக சேகரித்து பாதுகாத்து வைத்திருந்த காட்டெருமைகள், மான்களின் எலும்புகள் மற்றும் இறைச்சிகளை விறகுகள் மீது வன ஊழியர்கள் அடுக்கி வைத்தனர். பின்னர் ஆவணங்களின் அடிப்படையில் உடற்பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன் கூறும்போது, வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதி பெற்று 500 கிராம் வனவிலங்கு இறைச்சி, 30 கிலோ காட்டெருமை எலும்புகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளது என்றார்.க

Tags:    

Similar News