பண்ணாரி சாலையோரம் மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
- அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் இதை வீடியோவாக பதிவு செய்தனர்.
- கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகு மரத்தில் இருந்த சிறுத்தை கீழே இறங்கி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள், புலி, சிறுத்தை உலா வருவது வழக்கம் .
சத்தியமங்கலம் அடுத்த புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் அருகே சக்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
இங்குள்ள பண்ணாரி அம்மன் சோதனை சாவடியில் 24 மணி நேரமும் வனத்துறையினர், போலீசார் ஒருங்கிணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே சாலையோரம் ஒரு மரத்தின் மீது சிறுத்தை அமர்ந்திருந்தது. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த மரத்தின் மீது சிறுத்தை வெகு நேரமாக அமர்ந்திருந்தது.
அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் இதை வீடியோவாக பதிவு செய்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகு மரத்தில் இருந்த சிறுத்தை கீழே இறங்கி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.