உள்ளூர் செய்திகள்

விழாவில் தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் தாய் சேய் நல கண்காணிப்பு மையம்- மேயர் திறந்து வைத்தார்

Published On 2023-03-04 09:42 GMT   |   Update On 2023-03-04 09:42 GMT
  • தகவல்கள் இணையத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • சிவப்பு நிறத்தை பச்சை நிறமாக மாற்றி மீண்டும் தாய் சேய் நல மையத்திற்கு அனுப்பி கண்காணிக்கப்படும்.

தஞ்சாவூர்:

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக தாய் சேய் நல கண்காணிப்பு மையம் இன்று தொடங்கப்பட்டது. இம்மையத்தினை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் திறந்து வைத்தார். துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகர்நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மேயர் சண். ராமநாதன் பேசியதாவது:-

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லுகுளம், கரந்தை, மகர்நோன்புசாவடி , சீனிவாசபுரம் ஆகிய 4 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது கர்ப்பகால பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் 1212 கர்ப்பிணிகளில் 640 கர்ப்பிணிகள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த சோகை, தைராய்டு மற்றும் முந்தைய பிரசவம் சிசேரியன் அறுவை சிகிச்சை போன்ற அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளாக கண்டறியப்பட்டு அவர்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தின் மூலமாக செல்போன் வாயிலாக தொடர்பு கொள்ளப்பட்டு அவர்களின் சுகாதார குறியீடு அளவுகளின் அடிப்படையிலும், முறையாக பரிசோதனை மேற்கொள்ளாமல் இருப்பவர்களையும் கண்டறிந்து சிவப்பு நிறத்தில் அட்டவணைப்படுத்தி அவர்களின் தகவல்கள் இணையத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பின்னர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு தொடர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தி அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு சிவப்பு நிறத்தை பச்சை நிறமாக மாற்றி மீண்டும் தாய் தாய் சேய் நல் மையத்திற்கு அனுப்பி கண்காணிக்கப்படும்.

இவ்வாறு இந்த தாய் சேய் நல மையத்தின் மூலம் மாதம் இருமுறை அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு முறையான கர்ப்பகால கவனிப்பை கண்காணித்தல் மற்றும் பரிசோதனை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும். மேலும் கர்ப்பகால உணவுமுறை உள்ளிட்ட பாதுகாப்பான தாய்மைக்கான ஆலோசனைகள் வழங்குதல்.

கர்ப்பகாலத்தில் தடுப்பூசியை முறையாக தவறாமல் செலுத்தி கொள்வதை உறுதி செய்தல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் குறித்த வழிமுறைகளை விளக்கி கூறுதல், தாய் சேய் நல குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகளை வழங்குதல்.

அட்டவணைப்படி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்தல், அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளை பிரசவத்திற்கு ஒரு வாரம் முன்பாக ஒருங்கிணைந்த பேறுகால அவசரகால சிகிச்சை மற்றும் சிசு பராமரிப்பு பிரிவுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

பேறுகாலம் நிறையுற்றபின் 42 நாட்கள் வரை தொடர்ந்து தாய் சேய் நல கவனிக்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. தஞ்சாவூர் மாநகராட்சி தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தை 78458 49867 என்ற செல்போன் எண்ணில் தொடப்பு கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மார்களின் கர்ப்பகால இறப்பு மற்றும் சிசு இறப்பே இல்லை என்ற நிலையை எட்டுவதே இந்த தாய் சேய் நல மையத்தின் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில் மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, மேத்தா, ரம்யா சரவணன், மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், நகர்புற ஆரம்ப சுகாதார செவிலியர்கள், தரவு உள்ளீட்டாளர்கள் மற்றும் கர்ப்பிணிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து கர்ப்பிணிகளுக்கு பேரிச்சம்பழம், புரோட்டின் பவுடர் உள்ளிட்ட பல்வேறு சத்து பொருட்கள் அடங்கிய தாய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. முன்னதாக புள்ளி விபர உதவியாளர் செல்வகுமார் வரவேற்றார். முடிவில் பகுதி சுகாதார செவிலியர் மல்லிகா நன்றி கூறினார்.

Tags:    

Similar News