உள்ளூர் செய்திகள்

போதை தலைக்கேறியதால் நள்ளிரவில் ரகளை- சாலையின் குறுக்கே மரங்களை போட்டு நாற்காலியில் அமர்ந்த வாலிபர்

Published On 2023-06-20 11:24 IST   |   Update On 2023-06-20 11:24:00 IST
  • நாளை காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல கூறி அனுப்பி வைத்தனர்.
  • போதை ஆசாமிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட கூத்தன்குடி பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் ஜெயக்குமார் (வயது 36). கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு திட்டக்குடியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தினார். அளவுக்கு அதிகமாக குடித்ததால் தடுமாறியபடி மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார்.

அப்போது திட்டக்குடி-ராமநத்தம் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த ஜெயக்குமாரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ஜெயக்குமார், சம்மந்தமில்லாதவைகளை பேசினார்.

தொடர்ந்து போலீசார் அவர் மீது குடித்து விட்டு மோட்டார் சைக்கிளை இயக்கி வந்த பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரால் மோட்டார் சைக்கிளை இயக்க முடியாது என்பதால், ஜெயக்குமாரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். நாளை காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல கூறி அனுப்பி வைத்தனர்.

போதையில் தள்ளாடிய படி வீட்டிற்கு நடந்து சென்ற ஜெயக்குமார், திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் வந்தார். அங்கிருந்த மரவாடியில் இருந்த மரங்களை எடுத்து சாலையில் குறுக்கே வைத்தார். மரவாடியில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வந்து நடுரோட்டில் போட்டு அமர்ந்தார்.

அவ்வழியே வந்த வாகனங்கள், இந்த சாலையில் செல்லமுடியாமல் தடுத்து நிறுத்தினார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சாலையில் இருந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து ஜெயக்குமாருக்கு அறிவுரை கூறிய போலீசார், அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

சமீப காலமாக திட்டக்குடி பகுதியில் உள்ள இளைஞர்கள் மது போன்ற பல்வேறு போதைப் பொருட்களை உட்கொண்டு இரவு நேரங்களில் ரகளை, அராஜகம் செய்வது வாடிக்கையாகி வருகிறது. இது போன்ற போதை ஆசாமிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News