உள்ளூர் செய்திகள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு

Published On 2023-05-26 09:42 GMT   |   Update On 2023-05-26 09:42 GMT
  • சென்னை மாநகராட்சி பள்ளிகளின் உள்கட்டமைப்பு தற்போது தரமாக உள்ளது.
  • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகள் வாரியாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

சென்னை:

சென்னையில் ஏற்கெனவே 281 மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் 139 பள்ளிகள் புதிதாக இணைக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் தற்போது 420 மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பள்ளிகளில் தற்போது 1.35 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தற்போது சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக கல்வித்துறை அதிகாரிகள் கடுமையாக பணியாற்றி வருகிறார்கள்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி பள்ளிகளின் உள்கட்டமைப்பு தற்போது தரமாக உள்ளது. 2 லட்சம் மாணவர்கள் படிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மாநகராட்சி பள்ளியிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளும் உள்ளன.

ஸ்மார்ட்சிட்டி திட்டம், சிங்கார சென்னை 2.0 திட்டம் ஆகியவற்றின் மூலமாக பல பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகள் வாரியாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வின்போது 85 சதவீதத்துக்கு மேல் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளது. மாணவர்கள் நன்றாக படிப்பதற்காக சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் வசதிகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி பள்ளிகளின் நுழைவு வாயில்களில் விளம்பர பலகை வைக்குமாறு கூறியுள்ளோம்.

முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டங்கள் மூலமாகவும் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு வைத்து உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News