உள்ளூர் செய்திகள்

ஆந்திரா எல்லையில் சென்னை வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குதல்

Published On 2022-11-06 12:34 IST   |   Update On 2022-11-06 12:34:00 IST
  • திருத்தணி அருகே தமிழகம்- ஆந்திர எல்லையோரம் பொன்பாடியில் சோதனைச்சாவடி உள்ளது.
  • வாலிபர் ஒருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடப்பதாகதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

திருவள்ளூர்:

திருத்தணி அருகே தமிழகம்- ஆந்திர எல்லையோரம் பொன்பாடியில் சோதனைச்சாவடி உள்ளது. இதன் அருகே வாலிபர் ஒருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடப்பதாகதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று ரத்தகாயத்துடன் கிடந்த வாலிபரை மீட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் என்பது தெரிந்தது. திருப்பதிக்கு பஸ்சில் பயணம் செய்த போது பொன்பாடி சோதனைச் சாவடியில் உணவு சாப்பிடுவதற்காக பஸ்சில் இருந்து இறங்கி உள்ளார். அப்போது சிறுநீர் கழிக்க சிறிது தூரம் சென்ற போது அங்கு இருந்த 3 பேர் கும்பல் திடீரென சதீசை கட்டையால் தாக்கினர். மேலும் அவரிடம் இருந்த ரூ.3,800 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.

தலையில் பலத்த காயம் அடைந்த சதீசுக்கு 8 தையல் போடப்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சதீசை தாக்கிய கும்பல் யார்? கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்டனரா? என்று திருத்தணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News