உள்ளூர் செய்திகள்
காதல் கணவர் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் செய்த என்ஜினீயரிங் பட்டதாரி பெண் ஸ்ரீசிவரஞ்சனி.

என்ஜினீயர் வீட்டு முன்பு காதல் மனைவி தர்ணா- மகளிர் போலீசார் விசாரணை

Published On 2022-09-09 11:54 IST   |   Update On 2022-09-09 11:54:00 IST
  • காதல் திருமணம் குறித்து மோகன்ராஜின் பெற்றோருக்கு தெரியவந்ததும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • இதையடுத்து அவர்கள் பெங்களூருக்கு சென்று மோகன்ராஜை பவானிக்கு அழைத்து வந்தனர்.

பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி அண்ணாநகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (29). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பெங்களூரில் ஒரு நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தில் பவானி செங்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீசிவரஞ்சனி (27) என்பவர் வேலை பார்த்து வந்தார். அப்போது மோகன்ராஜிக்கும், ஸ்ரீசிவரஞ்சனிக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம் அவர்கள் பெங்களூரில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

காதல் திருமணம் குறித்து மோகன்ராஜின் பெற்றோருக்கு தெரியவந்ததும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் பெங்களூருக்கு சென்று மோகன்ராஜை பவானிக்கு அழைத்து வந்தனர்.

காதல் திருமணம் செய்த கணவர் மோகன்ராஜ் தன்னுடன் பேசவில்லை என்றும், எனவே அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி ஸ்ரீசிவரஞ்சனி பவானி அண்ணாநகர் பகுதியில் உள்ள மோகன்ராஜ் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தெரிய வந்ததும் பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீசிவரஞ்சனியிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு விட்டு சென்றார்.

Tags:    

Similar News