கோவில் குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
- போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கோவில் குளத்தில் தேடியும் ஞானசேகரனை கண்டுபிடிக்க முடியவில்லை.
- இன்று அதிகாலை கோவில் குளத்தில் ஞானசேகர் உடல் பிணமாக மிதந்தது.
திருப்போரூர்:
திருப்போரூரை சேர்ந்தவர் ஞான சேகரன் (வயது27). இவர் அங்குள்ள முருகன் கோவிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் மண்டபத்தில் தற்காலிகமாக மொட்டை அடிக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு முதல் ஞானசேகரன் திடீரென மாயமானார். அவரது துணி மட்டும் கோவில் குளக்கரை படிக்கட்டில் இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த கோவில் ஊழியர்கள் இது குறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கோவில் குளத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை கோவில் குளத்தில் ஞானசேகர் உடல் பிணமாக மிதந்தது.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஞானசேகரன் கோவில் குளத்தில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.