உள்ளூர் செய்திகள்

செல்போன் பறிப்பில் தொடர்புடைய சிறுவனை கைது செய்ய சென்றபோது பெண் இன்ஸ்பெக்டர் மீது கல்வீச்சு

Published On 2022-09-21 13:51 IST   |   Update On 2022-09-21 13:51:00 IST
  • கடந்த 6-ந்தேதி நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
  • தப்பி ஓடிய சிறுவன் மீது ஏற்கனவே வளசரவாக்கம், மதுரவாயல், போரூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது

போரூர்:

சென்னை வடபழனி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் முத்துலட்சுமி.

இவரது போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 6-ந்தேதி நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் போரூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது19) காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து நேற்று இரவு 11 மணி அளவில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வாகனத்தில் போரூர் பகுதிக்கு சென்றனர். சஞ்சய் மற்றும் ஒரு சிறுவனை கைது செய்தனர். பின்னர் மற்றொரு சிறுவனை பிடிக்க காரம்பாக்கம் பள்ளிக்கூட தெருவிற்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசை சூழ்ந்து கொண்டு சிறுவனை கைது செய்ய விடாமல் கடும் ரகளையில் ஈடுபட்டனர்.

திடீரென அவர்கள் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் மீதும் போலீஸ் வாகனத்தின் மீதும் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் போலீஸ் வாகனத்தின் பின் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கி சேதமடைந்தது. அதிர்ஷ்ட வசமாக போலீசாருக்கு காயம் ஏற்படவில்லை.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுவன் அங்கிருந்து நைசாக தப்பி ஓடிவிட்டான். இதையடுத்து சிறுவனின் தந்தை முரளியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தப்பி ஓடிய சிறுவன் மீது ஏற்கனவே வளசரவாக்கம், மதுரவாயல், போரூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News