வேதாரண்யத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்
- முறையான கணக்கெடுப்பு நடத்தி உரியநிவாரணம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
- அரசு அறிவித்த நிவாரணத் தொகை போதுமனதாக இல்லை.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் ஜெயராஜபவுலின் தலைமை தாங்கினார். கூட்டத்துக்கு வந்த விவசாயிகள், 'பருவம் தவறி பெய்த கனமழையால் சம்பா சாகுபடி பாதிக்கபட்டுள்ளது. இதனை முறையாக கணக்கெடுத்து கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அப்போது முறையான கணக்கெடுப்பு நடத்தி உரியநிவாரணம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
மேலும் தாசில்தார் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட முளைத்த நெற்பயிர்களுடன் வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பாதிக்கப்பட்ட வயல்களை முறையாக கணக்கெடுக்க கோரியும், உரிய நிவாரணத் தொகை வழங்க கோரியும் முழக்கமிட்டனர்.
பின்பு தாசில்தார் ஜெயசீலன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்று மீண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலர், 'வேதாரண்யம் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து முளைத்துவிட்டது. இதனை முறையாக வேளாண்மைதுறை அதிகாரிகள் கணக்கெடுக்கவில்லை. அரசு அறிவித்த நிவாரணத் தொகை போதுமனதாக இல்லை. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' என வலியுறுத்தினர்.