உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக 32 பெண்களிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வி.ஏ.ஓ.

Published On 2022-10-08 11:26 GMT   |   Update On 2022-10-08 11:26 GMT
  • பாடந்தொரை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சுனில் என்பவர் தான் பெண்களிடம் பணம் பெற்று போலி பணி நியமன ஆணைகளை வழங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  • சுனில் மீது கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் அங்கன்வாடிகளில் பணி வாங்கி தருவதாக கூறி ஏராளமான பெண்களிடம் தலா ரூ.50 ஆயிரம் வரை பெற்று கொண்டு ஏமாற்றி விட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுதொடர்பாக ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாடந்தொரை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சுனில் என்பவர் தான் பெண்களிடம் பணம் பெற்று போலி பணி நியமன ஆணைகளை வழங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் மீது கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் போலி பணி ஆணை தொடர்பாக நடுவட்டம் இன்ஸ்பெக்டர் ராம்பதி, கூடலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் ஆகியோர் நேற்று சுனிலை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பாடந்தொரை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த சுனில், சேரம்பாடியை சேர்ந்த சரண்யா என்ற பிரேமா, ஊட்டியை சேர்ந்த நான்சி ஆகிய 2 பெண்களிடம் போலியான அட்டை வழங்கியும், அவர்கள் மூலமாக அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி 32 பெண்களிடம் தலா ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார்.

மேலும் கிராம நிர்வாக அலுவலரின் சீல் வைத்த பணி நியமன ஆணையையும் அவர் வழங்கியுள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த பெண்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சென்று விசாரித்தனர்.

அப்போது அந்த பணி நியமன ஆணை போலியானவை என்று தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்தே பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவரை பந்தலூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதி சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் சுனிலை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News