உள்ளூர் செய்திகள்

வண்டலூரில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்- 2 பேர் கைது

Update: 2022-09-30 11:41 GMT
  • கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்காக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
  • கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட இருவரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வண்டலூர்:

தாம்பரம் போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொத்தேரி உள்பட பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை குடிசை தொழில் போல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்காக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று வண்டலூர் வெங்கடேசபுரம் 4-வது தெருவில் ஓட்டேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அந்த 2 வாலிபர்களும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது அதில் ஒரு பையில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த போது, இருவரும் ஒட்டேரி பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 19), முகமது யூசப் (20) என்பதும், இருவரும் கஞ்சா கடத்தி சென்று விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட இருவரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News