உள்ளூர் செய்திகள்

தொடர் மழையால் தண்ணீர் தேங்கியது- ஊத்துக்கோட்டை பகுதியில் 300 ஏக்கர் நெற்பயிர் சேதம்

Published On 2022-09-12 16:18 IST   |   Update On 2022-09-12 16:18:00 IST
  • தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது.
  • அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊத்துக்கோட்டை:

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை கொட்டி வருகிறது. ஊத்துக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழைக்கு 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர், செஞ்சி அகரம், லட்சிவாக்கம், சூளமேனி, பாலவாக்கம், தாராட்சி, பால்ரெட்டி கண்டிகை பகுதிகளில் கடந்த 15 நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை கொட்டியது.

இந்த மழைக்கு பேரன்டூர், செஞ்சி அகரம், லட்சிவாக்கம் பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது. ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நெற்பயிர் மூழ்கியதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து உள்ளனர். அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News