உள்ளூர் செய்திகள்

கார் தாறுமாறக ஓடி ஆம்னி பஸ் மீது மோதல்- 2 வாலிபர்கள் பலி

Published On 2023-11-27 16:26 IST   |   Update On 2023-11-27 17:40:00 IST
  • தறிகெட்டு சென்ற கார் அங்கிருந்த மரத்தின் மீது மோதி நின்றது.
  • ஆம்னி பஸ்சின் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்தது.

வண்டலூர்:

மறைமலைநகரை அடுத்த பொத்தேரியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் தீபக்(வயது 23). ஓட்டல் நடத்தி வந்தார். இவர் நேற்று நள்ளிரவு நண்பர்களான மறைமலைநகரை சேர்ந்த பிராகாஷ் என்பவரது மகன் ரூபேஷ்(வயது24) மற்றும் கோகுல்நாத், நவீன், ரோகித் ஆகியோருடன் காரில் கோவளம் நோக்கி சென்றார். காரை தீபக் ஓட்டினார். இவர்களில் ரூபேஷ் வீடு, நிறுவனங்களில் உள்அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தார்.

நள்ளிரவு 12 மணியளவில் ஊரப்பாக்கம், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே சென்று கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறக ஓடியது.

இதில் சாலை தடுப்பை தாண்டி எதிர்ப்புறம் சென்ற கார் எதிரே வேந்த ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது. மேலும் தறிகெட்டு சென்ற கார் அங்கிருந்த மரத்தின் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் காரில் இருந்த ரூபேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் தீபக், கோகுல்நாத், ரோகித், நீவீன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். ஆம்னி பஸ்சின் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்தது.

தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த தீபக், கோகுல்நாத் ஆகியோரை மீட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், நவீன், ரோகித் ஆகியோர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தீபக் பரிதாபமாக இறந்தார்.

தொடர்ந்து கோகுல்நாத், நவீன், ரோகித் ஆகிய 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிவேகமாக காரை ஓட்டியது விபத்துக்கு காரணம் என்று தெரிகிறது.

இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News