காதுகுத்தும் நிகழ்ச்சியில் தகராறு-வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய மேஸ்திரி கைது
- சேகர் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேஸ்திரி மல்லேஷை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே இட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் சேகர் (வயது20). தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் முத்தப்பா மகன் மல்லேஷ் (32). கட்டிட மேஸ்திரி.
இந்த நிலையில் சானபள்ளியில் நடந்த ஒரு காத்துகுத்தும் நிகழ்ச்சிக்கு இருவரும் சென்றிருந்தனர். அங்கு மல்லேஷ், சேகரிடம் மதுபாட்டில் வாங்கி வருமாறு கூறினார்.
அதற்கு சேகர் வாங்கி வர மறுத்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் அந்த தகராறு கைகலப்பாக மாறியதில், சேகரை, மல்லேஷ் எட்டி உதைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், அவர் ஆத்திரத்தில் அருகில் இருந்த பீர்பாட்டிலால் சேகரை தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த சேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த பகுதியில் சிறிது பதட்டம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சேகர் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேஸ்திரி மல்லேஷை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.