உள்ளூர் செய்திகள்

தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-10-02 16:13 IST   |   Update On 2022-10-02 16:13:00 IST
  • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
  • தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. வியாபாரிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே சாரல் மழை பெய்து மேகமூட்டத்துடன் இதமான குளிரும், வெயிலும் நிலவி வருவதால் இதனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்களுக்கு வாரவிடுமுறையையொட்டி ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர்ந்து விடுமுறை வருவதால் கொடைக்கானலில் கூட்டம் அதிகரித்தது. இதனால் வத்தலக்குண்டு மலைச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் முக்கிய சுற்றுலா இடங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, ரோஜா தோட்டம், பைன்பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, மோயர்பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், குணாகுகை உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அலைமோதியது.

மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகுசவாரியும், ஏரிச்சாலையை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர். நகரின் முக்கிய சாலைகளான 7 ரோடு, ஏரிச்சாலை, லாஸ்கட்சாலை, பூங்கா சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான மல்டிலெவல் பார்க்கிங் என்பது கனவாகவே உள்ளது. இதனால் சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. வியாபாரிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் இருந்தும் அதிகளவில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களை கண்டு ரசிக்க வந்திருந்தனர்.

தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டில் பிரையண்ட்பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா என 3 பூங்கா உள்ளது. இதில் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள ரோஜா பூங்காவிற்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்களில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதன்மூலம் சுமார் ரூ.6 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

இங்கு 50-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் ரோஜா பூக்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News