உள்ளூர் செய்திகள்

நெல்லை-தாம்பரம் கோடைகால சிறப்பு ரெயில் முன்பதிவு தொடங்கியது

Published On 2023-03-09 09:32 IST   |   Update On 2023-03-09 09:32:00 IST
  • முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் இருந்தே ஏராளமான பயணிகள் ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர்.
  • பெரும்பாலான தேதிகளில் சில மணி நேரத்திலேயே டிக்கெட் முழுமையாக விற்று தீர்ந்து விட்டன.

நெல்லை:

சென்னையில் இருந்து ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தென் மாவட்டங்களுக்கு கோடைகால சிறப்பு ரெயில் இயக்கப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு வருகிற ஏப்ரல் மாதம் முதல் தொடர்ச்சியாக 13 வாரங்கள் தாம்பரம்-நெல்லை இடையே கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் இருந்தே ஏராளமான பயணிகள் ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர். இதில் பெரும்பாலான தேதிகளில் சில மணி நேரத்திலேயே டிக்கெட் முழுமையாக விற்று தீர்ந்து விட்டன.

இந்த ரெயிலானது ஏப்ரல் 2, 9, 16, 23-ந்தேதிகளிலும், மே 7, 14, 21, 28-ந்தேதிகளிலும், ஜூன் 4, 11, 18, 25-ந்தேதிகளிலும் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 7.20 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இதே போல் மறுமார்க்கமாக வருகிற ஏப்ரல் மாதம் 3, 10, 17, 24-ந்தேதிகளிலும், மே 8, 15, 22, 29-ந்தேதிகளிலும், ஜூன் 5, 12, 19, 26-ந்தேதிகளிலும், வரும் அனைத்து திங்கட்கிழமைகளிலும் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு நெல்லை வந்தடையும்.

இந்த ரெயிலானது சேரன்மகாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News