கொலை செய்யப்பட்ட ஜெயசிங் மரியராஜ்
நெல்லையில் அ.தி.மு.க. நிர்வாகியை கொன்ற உறவினர் கைது- பரபரப்பு வாக்குமூலம்
- தனியார் கல்குவாரியில் பதுங்கி இருந்த தாசை போலீசார் கைது செய்தனர்.
- முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கொங்கந்தான்பாறை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசிங் மரியராஜ்(வயது 50). இவர் கட்டிடங்கள் கட்டி கொடுக்கும் காண்டிராக்ட் வேலை செய்து வந்தார். மேலும் கொங்கந்தான்பாறை அ.தி.மு.க. கிளை செயலாளராகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அவரது உறவினர் இல்ல துக்க நிகழ்வில் பங்கேற்க மரியராஜ் சென்றார். அப்போது மதிய நேரத்தில் கல்லறை தோட்டத்தில் குழி வெட்டுவதை பார்த்து விட்டு திரும்பியபோது அங்கு வந்த அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் தாஸ்(29) என்பவர் அவரை அரிவாளால் சரமாரி வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மரியராஜை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் நேற்று மாலையில் அவர் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான தாசை தேடி வந்தனர். இன்று அதிகாலை பொன்னாக்குடியில் தனியார் கல்குவாரியில் பதுங்கி இருந்த தாசை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் போலீசில் கூறியதாவது:-
நாங்கள் 2 பேரும் உறவினர்கள். நான் டிரைவராக வேலை பார்க்கும் தனியார் நிறுவனத்தில் ஜெயசிங் மரியராஜ் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். தொடர்ந்து காண்டிராக்ட் வேலைகளும் செய்து வந்தார். அப்போது அவருக்கு கட்டுமான பணிகளுக்கு ஜல்லி கற்கள் சப்ளை செய்து வந்தேன்.
இந்நிலையில் நான் புதிதாக வீடுகட்டி ஓரளவு முன்னேற்றம் அடைந்த நிலையில், அவரது பணத்தை நான் ஏமாற்றி சம்பாதித்து வீடு கட்டி சொகுசாக வாழ்வதாக என்னை பார்க்கும் போதெல்லாம் அவர் திட்டிக்கொண்டே இருந்தார். இதனால் நான் நேற்று மதியம் அவரை பார்த்து தட்டிக்கேட்டேன். அப்போது அவர் என்னை திட்டியதால் ஆத்திரம் அடைந்தேன். வாக்குவாதம் முற்றியதில், நான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மரியராஜை வெட்டிவிட்டு தப்பியோடி விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்த கொண்டனர். பின்னர் தாசை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.