ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
- ஏ.டி.எம். எந்திர அறையிலும் எப்போதும் வாடிக்கையாளர்கள் வந்து பணம் எடுத்து செல்வார்கள்.
- கடந்த 2 நாட்களாக வங்கியில் பணம் எடுப்பது, அதில் நிரப்புவது உள்ளிட்டவற்றில் கணக்கு வித்தியாசம் இருந்துள்ளது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு செல்லும் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கி வளாகத்திலேயே அந்த வங்கியின் ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. மேலும் அதனுடன் வேறு சில வங்கிகளின் ஏ.டி.எம். எந்திரங்களும் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் அமைந்துள்ள இந்த ஏ.டி.எம். எந்திர அறையிலும் எப்போதும் வாடிக்கையாளர்கள் வந்து பணம் எடுத்து செல்வார்கள்.
கடந்த 2 நாட்களாக வங்கியில் பணம் எடுப்பது, அதில் நிரப்புவது உள்ளிட்டவற்றில் கணக்கு வித்தியாசம் இருந்துள்ளது. இதனால் வங்கி மேலாளர் உத்தரவின்பேரில் ஏ.டி.எம். அறைக்குள் சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பதை ஊழியர்கள் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணித்து வந்தனர். நேற்று மதியம் இந்த அறைக்குள் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் நீண்ட நேரமாக நின்றுள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த ஊழியர்கள் வங்கி மேலாளர் மாரியப்பனிடம் புகார் தெரிவித்தனர். அவர் தெரிவித்த தகவலின் பேரில் சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அங்கு நின்ற வடமாநில வாலிபர்கள் 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்த பஷீர் மகன் சலீம் உசேன் (வயது 25), பாலுவால் பகுதியை சேர்ந்த அசன் மகன் முபட்(23) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் நூதன முறையில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை திருடி சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த சில நாட்களாக 2 பேரும் அந்த ஏ.டி.எம். அறைக்குள் சென்று போலி கார்டுகள் மூலமாக பணத்தை எடுத்து வந்துள்ளனர். பணத்தை எடுக்கும் நேரத்தில் அவர்களில் ஒருவர் அறை உள்ளே இருக்கும் மீட்டரின் மெயின் சுவிட்சை அணைத்து விடுவார். அதன் மூலம் பணம் வெளியே வந்துவிட்டாலும், அது குறைந்ததற்கான கணக்கு தெரியாமல் போய்விடும் என்றும், அதனை பயன்படுத்தியே பணத்தை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை மருத்துவ பரிசோதனை செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்றனர். அதற்குள் இரவு நேரமாகி விட்டதால் இன்று காலை ஆஜர்படுத்துமாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதனால் அவர்கள் 2 பேரையும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காசிராஜன் தலைமையிலான போலீசார் இன்று காலை போலீஸ் ஜீப்பில் கொண்டு சென்றனர். பாளை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே ஜீப் சென்றபோது சலீம் உசேன், முபட் ஆகிய 2 பேரும் ஜீப்பில் இருந்து குதித்து தப்பி ஓடினர். உடனே அவர்களை பிடிப்பதற்காக போலீசார் இறங்கி விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், பாளையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் பின்புறம் மறைந்திருந்த சலீமை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரத்தில் பாளை சாந்திநகர் 30-வது தெரு பகுதியில் பதுங்கி இருந்த முபட்டை மடக்கி பிடித்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.
விசாரணை கைதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்ற போது அவர்கள் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடியதும், போலீசார் அவர்களை துரத்தி பிடித்ததும் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.