உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக்கை முற்றுகையிட்ட பா.ஜ.க மகளிர் அணி தலைவிக்கு கொலை மிரட்டல்

Published On 2023-04-05 17:35 IST   |   Update On 2023-04-05 17:35:00 IST
  • பா.ஜ.க மகளிர் அணியினர் டாஸ்மாக் கடைகள் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • ராயர்பாளையம், ராமாட்சிபாளையம், குமரன் நகர் பகுதிகளில் மது விற்பது நடப்பது தெரியவரவே அங்கு சென்று மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சூலூர்:

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த வகையில் கோவை மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் நேற்று செயல்படவில்லை.

இந்நிலையில் கருமத்தம்பட்டியில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் சில இடங்களில் மதுக்கடை அருகே அதிக விலைக்கு மது விற்கப்படுவதாக தகவல் வந்தது. இந்த தகவல் அறிந்ததும் கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி தலைவி ரேவதி தலைமையில் சிலர் மது விற்பனை நடந்த இடங்களுக்கு சென்று பார்த்தனர்.

அங்கு விற்பனைக்காக மதுபாட்டில்கள் பெட்டி, பெட்டியாக இருந்தது. இதனை தொடர்ந்து பா.ஜ.க மகளிர் அணியினர் டாஸ்மாக் கடைகள் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. ஆனந்த ஆரோக்கியராஜூக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட நபர்களை பிடித்து, அங்கிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வேறு எங்காவது இதுபோன்ற மது விற்பனை நடக்கிறதா என சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ராயர்பாளையம், ராமாட்சிபாளையம், குமரன் நகர் பகுதிகளில் மது விற்பது நடப்பது தெரியவரவே அங்கு சென்று மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் கருமத்தம்பட்டி பகுதிகளில் மது விற்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து பா.ஜ.க வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி ரேவதி பேசும்போது, கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதியில் 6 மதுக்கடைகள் உள்ளதாகவும், இந்த மது கடைகளில் அரசு விடுமுறை தினத்தில் கூட அதிக விலைக்கு சர்வ சாதாரணமாக மது விற்பனை நடைபெறுகிறது. இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையே விடுமுறை தினத்தில் டாஸ்மாக் கடை அருகே மது விற்பனை நடந்ததை போலீசாருக்கு தெரிவித்த பா.ஜ.க மகளிர் அணி தலைவி ரேவதியை, அந்த பகுதியை சேர்ந்த பார் உரிமையாளர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான உரையாடல்கள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News