திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை
- தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- வரும் நாட்களிலும் இதேபோல் மழை பெய்தால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று எதிர்பார்ப்புடன் பொது மக்கள் தெரிவித்தனர்.
திருவள்ளூர்:
தென்இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குதிசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை பெய்து உள்ளது. நேற்று மாலை 5 மணி அளவில் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டியது. திருவள்ளூரில் மாலை 5 மணி அளவில் தொடங்கிய மழை இரவு 8 மணிவரை விட்டு விட்டு சாரலாக நீடித்தது.
ஏற்கனவே கடும் வெப்பத்தால் தவித்து வந்த மக்களுக்கு இந்த கோடை மழை சற்று நிம்மதியை தந்து உள்ளது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
வரும் நாட்களிலும் இதேபோல் மழை பெய்தால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று எதிர்பார்ப்புடன் பொது மக்கள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஊத்துக்கோட்டையில் 5 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருத்தணியில் 3 செ.மீட்டர், திருவாலங்காடு, பள்ளிப்பட்டு செங்குன்றம், சோழவரத்தில் தலா ஒரு செ.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.