திருவள்ளூரில் தோட்டக்கலை சார்பில் ஏற்பாடு செய்த நடமாடும் கடையில் தக்காளி ரூ.110-க்கு விற்பனை
- தக்காளி வரத்து குறைந்து உள்ளதால் அதன் விலை மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
- தோட்டக்கலை இணை இயக்குனர் ரூ.110-க்கு விற்கப்பட்ட தக்காளியை ரூ.90-க்கு விற்க நடவடிக்கை மேற் கொண்டார்.
திருவள்ளூர்:
தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை ஆகிறது. இதே போல் மற்ற மாநிலங்களிலும் தக்காளி விலை எகிறி உள்ளது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் இந்த விலை உயர்வு என்று கூறப்படுகிறது.
தக்காளி வரத்து குறைந்து உள்ளதால் அதன் விலை மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த ரேசன் கடைகளில் தக்காளியை விற்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது.
இதேபோல் திருவள்ளூர் மாவட்ட பகுதியிலும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடமாடும் கடைகள் மூலம் தக்காளி விற்பனை நடந்து வருகிறது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூ.110-க்கு தக்காளி விற்கப்பட்டது. ஆனால் திருவள்ளூர் காய்கறி மார்க்கெட் மற்றும் சுற்றுப்புற பகுதியிலுள்ள கடைகளில் ரூ.100-க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
மார்க்கெட்டை விட தோட்டக்கலைத்துறை சார்பில் தக்காளி விலை ரூ.10 அதிகமாக விற்கப்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அவர்களது கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஊழியர்கள் திணறினர். அவர்கள் கூறும்போது கோயம்பேட்டில் இருந்து தக்காளி வாங்கி விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த திருவள்ளூர் தோட்டக்கலை இணை இயக்குனர் ரூ.110-க்கு விற்கப்பட்ட தக்காளியை ரூ.90-க்கு விற்க நடவடிக்கை மேற் கொண்டார்.