உள்ளூர் செய்திகள்

திருத்தணி சார் பதிவாளர் அலுவலகத்தில்ஆள் மாறாட்டம் செய்து நிலம் விற்க முயற்சி- 2 பேர் கைது

Published On 2022-10-01 09:38 IST   |   Update On 2022-10-01 09:38:00 IST
  • திருத்தணி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆள் மாறாட்டம் செய்து நிலம் விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரம் பதிவு செய்ய வந்த நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி:

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சூரியநகரம் கிராமத்தில் 97 சென்ட் நிலம் சீனிவாசா ஆச்சாரி என்பவரது பெயரில் உள்ளது. இந்த நிலத்தை தெக்கலூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி பாரதி வாங்க தயாராக இருந்தார். இதை தொடர்ந்து நேற்று சூரியநகரம் கிராமத்தில் சீனிவாச ஆச்சாரி பெயரில் உள்ள நிலத்தை பதிவு செய்ய சார் பதிவாளர் அலுவலகத்திற்கு 2 பேர் வந்திருந்தனர்.

அப்போது திருத்தணி சார்பதிவாளர் அஸ்வினி விற்க வந்த நபரின் ஆதார் அட்டையை வாங்கி பார்த்து உங்கள் பெயர், தந்தை பெயர் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர்தன்னுடைய பெயர் சீனிவாசா ஆச்சாரி என்றும் தந்தை பெயரை பதிலளிக்காமல் தயக்கம் காட்டியுள்ளார். இந்த நிலையில் அவரது பின்புறத்தில் இருந்த சரவணன் என்பவர் சீனிவாச ஆச்சாரியின் தந்தை பெயரை கூறியுள்ளார். தந்தை பெயரை சொல்ல தயக்கம் காட்டியதால் சந்தேகம் அடைந்த சார் பதிவாளர் அஸ்வினி அவரது கைரேகையை பரிசோதித்தார்.

அப்போது ஆள்மாறாட்டம் நடந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் மற்றும் திருத்தணி போலீசாருக்கு அஸ்வினி தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த திருத்தணி போலீசார் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து ஆள் மாறாட்டம் செய்து பத்திர பதிவு செய்ய வந்த 2 பேரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காசிநாதபுரம் மேட்டு தெருவில் வசிக்கும் சரவணன் (வயது 36), ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி சைனபுரம் கிராமத்தில் வசிக்கும் மோகன் (50) ஆகியோர் ஆள் மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்ய வந்தது தெரிய வந்தது.

திருத்தணி சார்பதிவாளர் அஸ்வினி அளித்த புகாரின் அடிப்படையில் ஆள்மாறாட்டம் செய்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரம் பதிவு செய்ய வந்த நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News