தேவகோட்டை அருகே கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்- தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம்
- தேவகோட்டை அருகே உள்ள அடசிவயல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள அடசிவயல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கோவில் கிராமத்தில் மைய பகுதியில் உள்ளது. இந்த அம்மனை காவல் தெய்வமாக வணங்குகின்றனர். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 4அடி உயரம் கொண்ட உண்டியலை தூக்கி சென்று அதிலிருந்த பணத்தை திருடி சென்றுவிட்டனர்.
நேற்று காலை கோவிலை திறக்க சென்றபோது கோவில் கதவு திறந்து கிடப்பதை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் பரவியதும், கிராம மக்கள் அனைவரும் கோவில் முன்பு திரண்டனர். இது தொடர்பாக வேலாயுதபட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை திருடி சென்றகொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இந்த கிராமத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ள கற்படை அய்யனார்வயல் கிராமத்தில் உள்ள கருப்பர் கோவில் உண்டியல் திருட்டு முயற்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த காட்சிகள் கோவில் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை. இந்த நிலையில் இக்கோவிலில் 5-க்கும் மேற்பட்ட முறை திருட்டு முயற்சி நடந்ததுள்ளது.
தேவகோட்டை அருகே கொத்தங்குடி இடையன்காளி கோவிலில் தங்க நகைகள், உண்டியல் திருட்டு, தாழையூர் கிராமத்தில் உள்ள கூத்தாடி முத்துபெரியநாயகி அம்மன் கோவில் உண்டியல் திருட்டு, இரவுசேரி காளியம்மன் கோவில் உண்டியல் திருட்டு ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளன.
எனவே தொடர் திருட்டு சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருட்டில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.