சேலத்தில் தக்காளி விலை ரூ.120 ஆக எகிறியது
- பருவம் தவறிய மழையால் தக்காளி செடிகளில் பூக்கள் உதிர்தல், அழுகல் உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
- கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் உள்ளன. இதைத்தவிர மாவட்டத்தில் தினசரி காய்கறி சந்தைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பருவம் தவறிய மழையால் தக்காளி செடிகளில் பூக்கள் உதிர்தல், அழுகல் உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்து ஒரு கிலோ தக்காளி விலை ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் மேச்சேரி தக்காளி பிரசித்தி பெற்றதாகும். இந்த தக்காளி செடிகள் மேச்சேரி, காடையாம்பட்டி ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் தக்காளி பயிர் அழுகி விட்டது. தற்போது விவசாயிகள் புதிதாக தக்காளி செடி பயிரிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து கடந்த வாரம் 10 முதல் 15 லோடு தக்காளி வந்த நிலையில் தற்போது 5 லோடு வரை மட்டுமே வரத்து உள்ளது, என்றனர்.