இனிப்பு வழங்கி கொண்டாடிய மலைவாழ் மக்கள்.
ஊத்துக்கோட்டை அருகே ஆக்கிரமித்து கட்டிய தீண்டாமை சுவர் இடித்து அகற்றம்
- வாழவந்தான் கோட்டையில் 75-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் சுமார் 50 வருடங்களாக வசித்து வருகின்றனர்.
- ஓரிரு நாட்களில் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டையில் 75-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் சுமார் 50 வருடங்களாக வசித்து வருகின்றனர்.
இவர்கள் வந்து செல்லும் பொது வழிப்பாதையை சிலர் ஆக்கிரமித்து தீண்டாமை சுவர் எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த சுவரை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்தும், உடனடியாக தீண்டாமை சுவரை அகற்றக் கோரியும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே மலைவாழ் மக்கள் கடந்த 12-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது அவர்கள் தாசில்தார் அருண் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
ஓரிரு நாட்களில் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இந்தநிலையில் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம், ஊத்துக்கோட்டை தனி வட்டாட்சியர் வயலட் ஆகியோரின் முன்னிலையில் சுமார் 200 மீட்டர் நீளம், 5 அடி உயரம் கொண்ட தீண்டாமை சுவர் இடித்து அகற்றப்பட்டது. இதனை அறிந்து ஏராளமான மலைவாழ் மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் இனிப்புகள் வழங்கி இதனை கொண்டாடினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டதையொட்டி இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.