உள்ளூர் செய்திகள்

சூறாவளி காற்றுடன் பலத்த மழை- தலைவாசல் அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

Published On 2023-05-29 06:00 GMT   |   Update On 2023-05-29 06:00 GMT
  • சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், சுவர் இடிந்து விழுந்தது. அதில் செல்வி தலையில் பலத்த காயமடைந்தார்.
  • தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரப்பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரமாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதேபோல், சந்தனகிரி பகுதியில் மாரியம்மன், விநாயகர் உள்ளது. இதன் அருகே இருந்த பழமை வாய்ந்த அரசமரம், வேப்பமரம் ஆகியவை நேற்று பெய்த மழையில் கோவில் கலசத்தின் மேல் சாய்ந்தது. இதில் கோவில் சுவர் இடிந்தது. இதனால் பக்தர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை வெயிலில் தாக்கத்திலிருந்து மீண்டு வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகின்றனர்.ஆத்தூர் நகரில் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. ஆத்தூர் பஸ் நிலையப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த நேரம் காப்பாளர் அலுவலகமும் மழையால் சேதமடைந்தது.

இதேபோல் தலைவாசல் அருகே உள்ள சார்வாய் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி (வயது 40). இவர் ஆடுகள் மேய்த்து வருகிறார். நேற்று மாலை தலைவாசல் பகுதியல் மழை பெய்தது. இதையடுத்து மழைக்கு ஒதுங்குவதற்காக, செல்வி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்த ஹாலோ பிளாக்ஸ் கல்லால் கட்டப்பட்ட வீட்டின் அருகே ஆடுகளுடன் ஒதுங்கியுள்ளார்.

அப்போது, தொடர் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதில் செல்வி தலையில் பலத்த காயமடைந்தார். ஒரு ஆடு உடல் நசுங்கி பலியானது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News