உள்ளூர் செய்திகள்

மூணாம்பள்ளியில் மயான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2024-03-04 07:15 GMT   |   Update On 2024-03-04 07:15 GMT
  • அரசு தேர்வுகள் நடைபெறுவதால் போக்குவரத்து வேறு பாதையில் மாற்றி விடப்பட்டது.
  • ஊராட்சி செயலாளர் அம்மாசை ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மூணாம்பள்ளி இந்திரநகர் பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- இப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு போதிய அளவுமயான வசதி இல்லை. மேலும் சிலர் மயான பகுதியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். அந்த கட்டிடங்களை இடித்து மயானத்திற்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், இப்பகுதியில் 4 சாலைகள் சந்திப்பதால் அடிக்கடி விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படுவதால் 4 சாலைகளிலும் வேகத்தடை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், இரு பகுதிகளிலும் நிழற்குடை அமைத்து தர வேண்டும் எனவும், முறையாக குடிநீர் விநியோகம் இல்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா, வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜ், வருவாய்த்துறை அலுவலர்கள், கோசணம் ஊராட்சி செயலாளர் அம்மாசை ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் 7 நாட்களுக்குள் உங்களுக்கு தீர்வு ஏற்படுத்தி தருகிறோம் என உறுதி கூறியதன் அடிப்படையில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் கோபி நம்பியூர் சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரசு தேர்வுகள் நடைபெறுவதால் போக்குவரத்து வேறு பாதையில் மாற்றி விடப்பட்டது.

Tags:    

Similar News