பாலப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் திடீர் மோதல்- பஸ் கண்ணாடிகள் உடைப்பு
- திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட மின்விளக்குகளை அடித்து நொறுக்கினர்.
- கீழ்பாலப்பட்டி, கொமாரபாளையம் ஆகிய பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் பாலப்பட்டியை அடுத்துள்ள கொமாரபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி, கடந்த 2 நாட்களாக திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
திங்கட்கிழமை விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவும், நேற்று பகலில் கிடாவெட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு மாவிளக்கு நிகழ்ச்சிக்கு கீழ் பாலப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் மேளதாளங்களுடன் மாவிளக்கு எடுத்து சென்றனர்.
அப்போது கொமாரபாளையத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் மேள தாளங்களுடன் வரக்கூடாது என தடுத்தனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர், கற்களால் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதில் இரு தரப்பிலும் 6-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம், பரமத்தி வேலூர் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கீழ் பாலப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் பரமத்தி வேலூர்-மோகனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்ததுடன், திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட மின்விளக்குகளை அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மோகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கீழ்பாலப்பட்டி, கொமாரபாளையம் ஆகிய பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.