உள்ளூர் செய்திகள்

கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்: கைதான சப்-இன்ஸ்பெக்டர் சேலம் ஜெயிலில் அடைப்பு

Published On 2022-10-30 13:52 IST   |   Update On 2022-10-30 13:52:00 IST
  • கீரம்பூர் அருகே ராசாம்பாளையம் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரிடம், வேலுச்சாமி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார்.
  • சுங்கச்சாவடி பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை கைது செய்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள பில்லூரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 43). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான சந்திரசேகர் (43) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 6-ந்தேதி இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.

இதுகுறித்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் முத்துக்குமார் கொடுத்த புகாரின்படி சந்திரசேகரன், அவரது மனைவி பர்வதம், தாயார் சரஸ்வதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த பரமத்தி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் (55) இந்த வழக்கில் சந்திரசேகர், மனைவி பர்வதம் ஆகியோர் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க சந்திரசேகரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

இதையடுத்து பர்வதம் ஈரோட்டை சேர்ந்த தனது சகோதரர் வேலுச்சாமியை வைத்து பேரம் பேசியதில் ரூ.5 ஆயிரம் பெற சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஒப்புக்கொண்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வேலுச்சாமி நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து கீரம்பூர் அருகே ராசாம்பாளையம் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரிடம், வேலுச்சாமி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது சுங்கச்சாவடி பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை கைது செய்தனர்.

அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, அவரை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News