உள்ளூர் செய்திகள்

பிறந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாடுறாங்க?- தெருவிளக்கு வெளிச்சத்தில் கேக் வெட்டி சாணத்தால் அபிஷேகம் செய்த மாணவர்கள்

Published On 2023-03-27 10:03 GMT   |   Update On 2023-03-27 10:03 GMT
  • நண்பர்கள் காசு வசூல் செய்து கேக் ஆர்டர் செய்து இருக்கிறார்கள்.
  • அந்தி மயங்கி இருள் சூழ்ந்ததும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தயாரானார்கள்.

என்னத்த சொல்ல... என்று வடிவேலு பாணியில் தலையில் அடித்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.

பிறந்த நாள் என்றால் புதிய ஆடை அணிவார்கள். கோவில்களுக்கு செல்வார்கள். சிலர் நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டுவார்கள். மெழுகுவர்த்தி ஏற்றி 'ஹேப்பி பர்த் டே' பாடுவார்கள். உற்சாகத்தில் கேக்கை எடுத்து முகத்தில் பூசுவார்கள். வாசனை நுரையை பீய்ச்சி அடித்தும் மகிழ்வார்கள்.

எங்காவது யாராவது உடலெல்லாம் சாணத்தை பூசியும், முட்டையை வீசியும் கொண்டாடுவதை கேள்விபட்டிருக்கிறோமா? இப்படியும் கொண்டாடுபவர்களை என்ன சொல்வது? கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு, அருகே உள்ள செட்டிவிளை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் தங்களில் யாருக்காவது பிறந்த நாள் என்றால் பொது வெளியில் இப்படித் தான் கொண்டாடுவார்களாம்.

நேற்று கல்லூரி மாணவர் ஒருவருக்கு பிறந்த நாள். நண்பர்கள் காசு வசூல் செய்து கேக் ஆர்டர் செய்து இருக்கிறார்கள். அந்தி மயங்கி இருள் சூழ்ந்ததும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தயாரானார்கள். கேக் வந்தது, ரோட்டோரமாக தெருவிளக்கு வெளிச்சத்தில் ஒரு ஸ்டூலை போட்டு அதில் கேக்கை வைத்து மெழுகுவர்த்திகளையும் ஏற்றினார்கள்.

மாப்பிளே... கேக்கை வெட்டுடா என்றதும் அவரும் மகிழ்ச்சியுடன் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு கேக்கை வெட்டினார்.

அவ்வளவுதான்... சுற்றி நின்ற நண்பர்கள் சரமாரியாக முட்டைகளை எடுத்து வீசினார்கள். உடல் முழுவதும் முட்டை கருக்கள் வடிந்தது.

சிலர் முட்டையை எடுத்து அவரது முகத்திலும் தேய்த்துவிட தவறவில்லை.

அதோடு விடவில்லை. பக்கெட்டுகளில் தயாராக கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை எடுத்து தலையில் ஊற்றி சாணத்தில் குளிக்க வைத்தார்கள்.

சிலர் சாணத்தை எடுத்து வீசினார்கள். இன்னும் சிலர் சாணத்தை முகத்திலும் பூசினார்கள்.

பிறந்த நாள் கொண்டாடிய அந்த மாணவரின் உடல் எப்படி இருந்து இருக்கும் என்று சொல்ல தேவையில்லை.

ஒரு படத்தில் வடிவேல் மீது மறைந்து இருந்து காய்களை வீசி கலாய்ப்பார்கள். அப்போது அங்கு அரிவாளுடன் வந்தவரை தனக்கு கேடயமாக்கி என் தலைவர் வந்துட்டாருல்ல... இனி வீசி பாருங்கடா என்றதும் மறைந்திருந்து சாணத்தை முகத்தில் அடிப்பார்கள். அதை முகர்ந்து பார்த்த வடிவேல் சீ.. கர்மம்... கர்மம் என்பார். கிட்டத்தட்ட அதே பாணியில்தான் அந்த வாலிபரும் அவ்வப்போது தனது முகத்தில் வந்து விழுந்த சாணத்தையும் முட்டையையும் துடைத்தபடி நாற்றத்தால் முகத்தை சுளித்துக் கொண்டார்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஒரு அளவே இல்லையாப்பா என்று சொல்லி சென்றார்கள்.

'தேய்கின்றது பொன்மாலை நிலா... தேயாதது நம் ஆசை நிலா... இது வானம் போலே வாழும் பாசம்' என்ற பாடலை வேறு பாடிக்கொண்டு ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து ஆட்டமும் போட்டுக் கொண்டார்கள். இதை செல்லில் பதிவு செய்த யாரோ ஒருவர் இணையத்தில் பதிவேற்றி உள்ளார். அது வைரலாகி வருகின்றது.

Tags:    

Similar News