அம்பத்தூரில் வீட்டுக்குள் புகுந்த அரியவகை கோதுமை நல்லபாம்பு
- பாம்பின் சீற்ற சத்தம் நன்றாக கேட்டதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் கூறினர்.
- பிடிபட்ட பாம்பை பூந்தமல்லி அடுத்த அரண்வாயில் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கணேசன் விடுவித்தார்.
அம்பத்தூர்:
அம்பத்தூர், லலிதாம்பிகை நகரில் உள்ள மாந்தோப்பு காலனியில் வசித்து வருபவர் செல்வ குமார். இவரது வீட்டுக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள மிகக்கொடிய விஷம் கொண்ட அரியவகை கோதுமை நல்ல பாம்பு புகுந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்து வெளியே வந்தனர். இது குறித்து அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவும், போட்டோவும் எடுக்க ஆர்வமிகுதியில் அருகில் சென்றனர்.
ஆனால் அவர்களைப் பார்த்ததும் பாம்பின் சீற்றம் அதிகமானது. இதை கண்ட அருகில் நின்றவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அந்த கோதுமை நல்லபாம்பு படமெடுத்து மிரட்டியது.
இதுபற்றி அம்பத்தூரில் உள்ள பாம்பு பிடி வீரர் கணேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி கோதுமை நல்லபாம்பை லாவகமாக பிடித்தார்.
நீண்ட நேரம் படமெடுத்து போக்கு காட்டிய அரிய வகை கோதுமை நல்ல பாம்பை பார்க்க அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் குவிந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
பாம்பின் சீற்ற சத்தம் நன்றாக கேட்டதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் கூறினர். பிடிபட்ட அந்த பாம்பை பூந்தமல்லி அடுத்த அரண்வாயில் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கணேசன் விடுவித்தார்.