உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு 17-ந்தேதி முதல் கடன் மேளா

Published On 2022-08-14 14:04 IST   |   Update On 2022-08-14 14:04:00 IST
  • திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கடன் மேளா நடக்கிறது.
  • தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்துக்கு ஆய்வு கட்டணத்தில் இருந்து முழுமையாகவும் விலக்கு அளிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வருகிற 17-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வரை நடக்கிறது.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு தொழில் கடன் மேளா, கிளை அலுவலகம் முதல் தளம், எம்.ஜி.ஆர். சாலை, மறைமலைநகர் என்ற முகவரியில் நடைபெறும். இந்த கடன் மேளாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சிறப்பு தொழில் திட்டங்கள், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலதன திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படும்.

இதில் தகுதிவாய்ந்த தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் ரூ.1.50 கோடி வரை கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மேளாவில் அளிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகையும், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்துக்கு ஆய்வு கட்டணத்தில் இருந்து முழுமையாகவும் விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் பயன் படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9445023494, 9342654834, 9445023507, 9444396821 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கடன் மேளா நடக்கிறது. இங்கு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் குறித்து விளக்கம் தரப்படும்.

இந்த காலத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய 044-26257664, 26248644 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Similar News