உள்ளூர் செய்திகள்

பள்ளியில் மேஜை, நாற்காலியை அடித்து உடைத்த மாணவ, மாணவிகள் 5 பேர் சஸ்பெண்ட்

Published On 2023-03-09 04:36 GMT   |   Update On 2023-03-09 07:52 GMT
  • மாணவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் மாணவிகளும் மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தினர்.
  • மாணவ, மாணவிகள் ரகளையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாரண்டஅள்ளி:

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 40 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் கடந்த வாரம் அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் ஒரு வகுப்பறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சில மாணவர்கள் வகுப்பறையில் இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசினர். மேலும் கம்பால் மின்விசிறிகள், சுவிட்ச் போர்டு ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தினர்.

மாணவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் மாணவிகளும் மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தினர்.

இதுகுறித்து அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர், ரகளையில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து நடந்த சம்பவங்களை கூறினார். பின்னர் பள்ளியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று மாணவ, மாணவிகளிடம் எழுதி வாங்கப்பட்டது.

இந்தநிலையில் மாணவ, மாணவிகள் ரகளையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கூறியதாவது:- அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையில் மேஜை, நாற்காலிகளை சில மாணவ, மாணவிகள் அடித்து சேதப்படுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் இவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

தற்போது பள்ளியில் ரகளையில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் 5 பேர் 5 நாட்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News