உள்ளூர் செய்திகள்

சத்தியமங்கலம் அருகே நள்ளிரவில் விபத்தில் 2 வாலிபர்கள் பலி

Published On 2023-01-13 11:13 IST   |   Update On 2023-01-13 11:14:00 IST
  • ரோட்டோரம் நிறுத்தியிருந்த லாரியை கவனிக்காததால் மோட்டார் சைக்கிள் லாரியின் பின் பக்கத்தில் பலமாக மோதியது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இரவு நேரங்களில் வரும் கனரக வாகனங்கள் சத்தியமங்கலம்-பண்ணாரி சாலையில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டு காலை மீண்டும் தாளவாடி மலை பகுதிக்கு கர்நாடாகாவுக்கு புறப்பட்டு செல்லும்.

அதே போல் நேற்று இரவும் கர்நாடகாவுக்கு செல்ல ஒரு லாரி வந்தது. இரவு 9 மணி ஆனதால் டிரைவர் லாரியை சத்தியமங்கலம்-பண்ணாரி சாலை குய்யனூர் என்ற பகுதியில் ரோட்டோரம் நிறுத்தி இருந்தார். இரவு நேரம் என்பதால் லாரி நிற்பது தெரியவில்லை.

இந்த நிலையில் இரவு 1 மணியளவில் சத்தியமங்கலம் அடுத்த தோப்பூர் காலனியை சேர்ந்த நடராஜ் என்பவரது மகன் ரகுபதி (26), முருகன் என்பவரது மகன் சதீஷ்குமார் (24)ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் பண்ணாரி நோக்கி சென்றனர்.

அப்போது அவர்கள் ரோட்டோரம் நிறுத்தியிருந்த லாரியை கவனிக்காததால் மோட்டார் சைக்கிள் லாரியின் பின் பக்கத்தில் பலமாக மோதியது. இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே ரகுபதி பலியானார். படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பலியானார்.

விபத்தில் பலியான ரகுபதி ஒரு தனியார் வங்கியில் ஊழியராகவும், சதீஷ்குமார் டிரைவராகவும் வேலைப்பார்த்து வந்தனர்.

இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News