உள்ளூர் செய்திகள்

2½ வயது தங்கையை தாய் போல் பராமரித்த சத்யா- உருக்கமான தகவல்

Published On 2022-10-15 07:58 GMT   |   Update On 2022-10-15 07:58 GMT
  • சத்யாவின் மரணம் குடும்பத்தை நிலை குலைய செய்துள்ளது.
  • தாய் ராமலட்சுமி மகள் மற்றும் கணவரை ஒரே நேரத்தில் பறி கொடுத்து விட்டு அடுத்து 2 குழந்தைகளுடன் என்ன செய்ய போகிறோமோ என்ற வேதனையில் தவித்து வருகிறார்.

ஆலந்தூர்:

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மின்சார ரெயில் முன்பு தள்ளி மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இப்படி கூட கொலைகள் நடக்குமா? என நினைக்க தோன்றும் வகையில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சோகம் மறைவதற்குள் அவரது தந்தை மாணிக்கம் மகள் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஒருதலைக்காதலால் ஒரு அப்பாவி மாணவி மற்றும் அவரது தந்தை உயிர்கள் பறிபோய் உள்ளது, சோகத்திலும் சோகத்தை அனைவர் மனதிலும் ஏற்படுத்தி இருக்கிறது. கொலையுண்ட சத்யா பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன.

இவரது தாய் ராமலட்சுமி ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் இவருக்கும் கணவர் மாணிக்கத்துக்கும் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த தம்பதிக்கு சத்யா பிறந்தார்.

அதன் பிறகு அவர்களுக்கு அடுத்தடுத்து 2 குழந்தைகள் பிறந்தது. 15 வயதான 2-வது மகள் பரங்கிமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 3-வது குழந்தையான செல்விக்கு தற்போது 2½ வயது தான் ஆகிறது.

ராம லட்சுமியின் தங்கை காஞ்சனா லஞ்ச ஒழிப்பு துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரது தம்பி சீனிவாசன் எழும்பூரில் போலீஸ்காரராக இருந்து வருகிறார். இவருக்கும் பெண் குழந்தை தான் உள்ளது. இதனால் தங்களுக்காவது ஆண் வாரிசு கிட்டும் என்ற நம்பிக்கையில் ராமலட்சுமி தம்பதியினர் இருந்தனர்.

ஆனால் 3-ம் பெண்களாக பிறந்ததால் சற்று வருத்தம் அடைந்தனர். ஆனாலும் அவர்கள் அதை காட்டி கொள்ளாமல் பாசமாக தான் வளர்த்து வந்தனர்.

மூத்த மகளான சத்யா பெற்றோர் மீது அதிக பாசத்துடன் இருந்தார். பெற்றோர் என்ன சொன்னாலும் அதை கேட்டு நடந்தார்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் 3- வது குழந்தை பிறந்ததும் அதற்கு பால் கொடுக்கமுடியாமல் ராமலட்சுமி கஷ்டப்பட்டார், இதை அறிந்த சத்யா தனது தங்கைக்கு பாட்டிலில் பால் கொடுப்பது. தொட்டிலில் தூங்க வைப்பது என ஒரு தாயாக மாறி பராமரித்து வந்தார். தனக்கு என்ன பிரச்சினை என்றாலும் அதை மூடி மறைக்காமல் சத்யா தனது பெற்றோரிடம் தெரிவிப்பார்.

அப்படி தான் கொலையாளி சதீஷ் தன்னை பின் தொடர்ந்து வந்து தொந்தரவு கொடுப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் சதீசின் நடத்தை சரியில்லை, இதனால் அவனது பேச்சுக்கு மயங்கி விடாதே என்று மகளை எச்சரித்தனர். இதை ஏற்றுக்கொண்ட சத்யா முதலில் நட்பாக பழகினாலும் அதன்பிறகு சதீசை ஏறெடுத்து பார்க்காமல் கல்லூரிக்கு சென்று வந்தார். ஆனாலும் சதீசின் செயல் எல்லை மீறி போனதால் இது தொடர்பாக 2 முறை போலீசிலும் புகார் கொடுத்தனர்.

ஆனால் 2 குடும்பத்தினரும் போலீஸ் துறையை சேர்ந்ததால் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளனர். சதீஷின் தந்தையும் என் மகன் இனிமேல் தொந்தரவு எதுவும் கொடுக்கமாட்டான் என வாக்குறுதிகொடுத்தார். இதனால் போலீசார் புகார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விட்டு விட்டனர். ஆனாலும் சதீசின் கொட்டம் அடங்கவில்லை.

சத்யாவை விரட்டி விரட்டி சென்று தொந்தரவு கொடுத்து வந்தார். இதனால் சத்யா உயிருக்கு ஆபத்து எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக ராமலட்சுமியின் தந்தை தினமும் பேத்தியை அழைத்து கொண்டு பரங்கிமலை ரெயில் நிலையத்துக்கு வருவார். பின்னர் பிளாட்பாரத்திற்கும் கூடவே வந்து மின்சார ரெயிலில் ஏற்றி விட்டு தான் செல்வது வழக்கம்.

அது போல தான் சம்பவம் நடந்த நேற்று முன்தினமும் தாத்தா பேத்தியை அழைத்து கொண்டு பரங்கிமலை ரெயில் நிலையத்துக்கு சென்றார். ஆனால் அன்று அவர் பிளாட்பாரத்துக்கு வராமல் ரெயில் நிலையத்துக்கு வெளியே இறக்கி விட்டு சென்றார். இதை ஏற்கனவே நோட்டமிட்டு அங்கு காத்திருந்த சதீஷ் தனது தோழிகளுடன் நின்று கொண்டிருந்த சத்யா அருகே சென்று கடைசியாக தனது ஆசையை தெரிவித்தார். உடனே சத்யா இனிமேல் என்னுடன் பேசாதே, என்னை விட்டு விலகி செல் என கோபமாக கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் என்னை திருமணம் செய்யாத நீ இனி யாரையும் திருமணம் செய்யக்கூடாது என ஆவேசத்துடன் ரெயில் முன்பு தள்ளி விட்டு கொன்றது தெரிய வந்துள்ளது.

சத்யாவின் மரணம் அந்த குடும்பத்தை நிலை குலைய செய்துள்ளது. அவரது தாய் ராமலட்சுமி மகள் மற்றும் கணவரை ஒரே நேரத்தில் பறி கொடுத்து விட்டு அடுத்து 2 குழந்தைகளுடன் என்ன செய்ய போகிறோமோ என்ற வேதனையில் தவித்து வருகிறார். தன்னை தாய் போல கவனித்து வந்த அக்காளை காணாது 2½ வயது பிஞ்சுமனம் ஏங்குவது கண்கலங்க வைத்துள்ளது.

Tags:    

Similar News