உள்ளூர் செய்திகள்

மதுரையில் ஜவுளி வியாபாரியிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி: ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 5 பேர் கைது

Published On 2023-04-14 12:57 IST   |   Update On 2023-04-14 12:57:00 IST
  • வியாபாரிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை:

மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (வயது55). டெக்ஸ்டைல் தொழில் செய்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் டிராவல்ஸ் நடத்தி வரும் உறவினர் ஒருவருக்கு கொடுப்பதற்காக ரூ.50 லட்சத்துடன் தனது மனைவி யூசுப் சுலைகாவை அழைத்து கொண்டு காரில் சென்றார்.

காரை மதுரையை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (36) என்பவர் ஓட்டி சென்றார். அவர்களது கார் கொட்டாம்பட்டி பக்க முள்ள திருச்சுனை விலக்கு அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது போலீஸ் சீரூடை அணிந்த 2 பேர் அந்த பகுதி வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்.

ஷேக் தாவூத் சென்ற காரையும் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரது மனைவி கைப்பையில் இருந்த ரூ.50லட்சத்தை பார்த்தனர். அவர்கள் அந்த பணத்திற்கான ஆவணத்தை ஷேக் தாவூத்திடம் கேட்டனர்.

அதற்கு அவர் இல்லை என்று தெரிவித்ததால், சோதனை செய்த நபர்கள் ரூ.50லட்சம் பணத்தை வாங்கி வைத்து கொண்டு, கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்து ஆவணத்தை காண்பித்து பணத்தை வாங்கி செல்லுமாறு கூறிவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஷேக் தாவூத், அந்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்றார். அய்யாபட்டி விலக்கு பாலம் அருகே சென்ற மோட்டார் சைக்கிள், திடீரென எதிர் திசைக்கு சென்று மாயமானது. இதனால் அந்த நபர்கள் போலீஸ் வேடத்தில் தன்னிடம் இருந்த பணத்தை பறித்து சென்றதை ஷேக் தாவூத் அறிந்தார்.

அதுபற்றி அவர் கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வியாபாரிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களின் படம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் அவர்களை போலீசார் தேடி வந்தனர். வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

வழிப்பறி சம்பவம் குறித்து வியாபாரி ஷேக் தாவூத், அவரது மனைவி யூசுப் சுலைகா , காரின் டிரைவர் அபுபக்கர் சித்திக் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார்.

இதனால் வழிப்பறி சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவரும், மேலும் சிலரும் சேர்ந்து திட்டமிட்டு ஜவுளி வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் கார் டிரைவர் அபுபக்கா் சித்திக் (27), அவரது சகோதரரான மதுரை கே.புதூர் சதாம் உசேன்(30), அசன் முகமது (30), மதுரை ஆத்திக்குளம் மகாலட்சுமி நகரை சேர்ந்த பார்த்தசாரதி(42), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நாகராஜன் கோகுல பாண்டியன் (39) ஆகியோர் ஈடுபட்டது உறுதி செய்யப் பட்டது.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி, கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களி டம் இருந்து ரூ.49 லட்சத்து 25 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான நாகராஜன் கோகுல பாண்டியன் மதுரை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News