உள்ளூர் செய்திகள்

ரெயில்வே ஊழியரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்த வங்கிக்கு ரூ.2 லட்சம் அபராதம்

Published On 2022-12-01 10:59 GMT   |   Update On 2022-12-01 10:59 GMT
  • திருவாரூர் பனகல் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் நீண்ட நாட்களாக சுப்பிரமணியன் கணக்கு வைத்துள்ளார்.
  • வங்கி கணக்கு மூலம் மாதம் தோறும் ரூ.18 ஆயிரத்து 226 ஓய்வூதியமாக பெற்று வந்தார்.

திருவாரூர்:

திருவாரூர் விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தென்னக ரெயில்வேயில் பணிபுரிந்து கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

மேலும் திருவாரூர் பனகல் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் நீண்ட நாட்களாக கணக்கு வைத்துள்ளார். அந்த வங்கி கணக்கு மூலம் மாதம் தோறும் ரூ.18 ஆயிரத்து 226 ஓய்வூதியமாக பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 27.5.2020 இல் இவரது வங்கி கணக்கில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டது. இதனை எடுப்பதற்காக அடுத்த நாள் சுப்பிரமணியன் வங்கிக்கு சென்றபோது இவர் தன்னுடன் பணிபுரிந்த நண்பர் ஒருவரின் கடனுக்காக போட்ட ஜாமீன் கையெழுத்து காரணமாக இவரது ஓய்வூதியத்தை எடுக்க முடியாமல் நிறுத்தி வைத்துள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த மாதம் கொரோனா ஊரடங்கு என்பதால் அவரது மார்ச் மாதத்திற்கான ஓய்வூதியம் தாமதமாக தான் வந்தது.

இந்த நிலையில் அதை வைத்து வாழ்க்கை நடத்தி வரும் அவர் அந்த ஓய்வூதியம் கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து பலமுறை இவரது வங்கி கணக்கில் பணம் எடுக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் மனவேதனை அடைந்த சுப்பிரமணியன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியதும் குறிப்பிட்ட அளவு பணத்தை விடுவிப்பது மீதமுள்ள பெருமளவு பணத்தை நிறுத்தி வைப்பதுமாக தொடர்ந்து அந்த வங்கி நிர்வாகம் செய்து வந்துள்ளது.

இதுகுறித்து அவர் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீராணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி லட்சுமணன் அடங்கிய அமர்வு, புகார்தாரர் மேற்கோள் காட்டிய இரண்டு தீர்ப்புகள் மற்றும் சட்ட பிரிவுகள் அனைத்தும் புகார்தாரின் கூற்றிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. இந்த மேற்கோள்களின் மூலம் எக்காரணத்தைக் கொண்டும் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவேட்டியை நிறுத்தி வைக்க கூடாது என்பது தெளிவாகிறது.

மேலும் புகார்தாரருக்கு மாதந்தோறும் ஓய்வூதியத் தொகை அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பதை நன்கு அறிந்தும் பணத்தை வங்கி நிறுத்தி வைத்துள்ளது சேவை குறைபாடு என்று இந்த ஆணையம் கருதுகிறது. அவரது பணத்தை நிறுத்தி வைத்து வங்கியில் இருந்து அத்தியாவசிய தேவைக்கு பணத்தை எடுக்க விடாமல் வங்கி தடுத்துள்ளது.

எனவே புகார்தாரருக்கு வங்கி சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை செய்ததற்கு இழப்பீடாக ரூ.1 லட்சமும், புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

மேலும் உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து ஆறு வார காலத்திற்குள் புகார்தாரருக்கு இந்த தொகையினை வங்கி கிளை வழங்காவிட்டால் வழக்கு செலவு தொகை நீங்கலாக மீதமுள்ள தொகைக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Tags:    

Similar News