மாநகராட்சி பெண் ஊழியர் கழுத்தை நெறித்து கொலை- நாடகமாடிய கணவர் கைது
- மணிமாறன் தேனாம்பேட்டையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
- கடந்த வாரம் மைதிலி திடீரென மாயமானார்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், பூங்கா வனபுரம், 1-வது தெருவில் வசித்து வருபவர் மணிமாறன். இவரது மனைவி மைதிலி (வயது 34). திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மணிமாறன் தேனாம்பேட்டையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வருகிறார். வாரத்திற்கு ஒரு நாள் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த வாரம் மைதிலி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து அவரது கணவர் மணிமாறன் திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மணலி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே மைதிலி பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
கடந்த வாரம் மைதிலி, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தன்னுடன் வேலை செய்யும் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே வந்து இறங்கியதாக தெரிகிறது. இதனை கவனித்த கணவர் மணிமாறன் மனைவியை கண்டித்து உள்ளார்.
இதன் பிறகே மைதிலி காணாமல் போனது தெரிய வந்தது. இதனால் கணவர் மணிமாறன் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது மணிமாறன், மனைவி மைதிலியை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.