உள்ளூர் செய்திகள்

திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து நீராடினர்.

மாவட்டம் முழுவதும் பரவலாக கொட்டுகிறது- முள்ளங்கினாவிளையில் 57.8 மில்லி மீட்டர் மழை

Published On 2023-05-13 11:21 IST   |   Update On 2023-05-13 11:21:00 IST
  • தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
  • அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வரும் நிலையில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் குளு குளு சீசன் நிலவுகிறது.

நேற்று காலையிலும் வெயில் அடித்து வந்த நிலையில் இரவு மழை பெய்ய தொடங்கியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தக்கலை, குருந்தன்கோடு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. முள்ளங்கினாவிளை பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 57.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றும் அருவியல் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மைனஸ் அடிக்கு சென்றது.

இதையடுத்து பெருஞ்சாணி அணையில் இருந்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த மழை, முக்கடல் பகுதியிலும் பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயரத் தொடங்கியது. மைனஸ் அடியில் இருந்த முக்கடல் அணையின் நீர்மட்டம் இன்று காலை பிளஸ் அடிக்கு வந்தது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 0.30 அடியாக உள்ளது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 38.40 அடியாக உள்ளது. அணைக்கு 160 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41 அடியாக உள்ளது. அணைக்கு 241 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 51 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டு உள்ளது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை2.2, பெருஞ்சாணி 15.2, களியல் 4, குழித்துறை 9, மயிலாடி 11.4, நாகர்கோவில் 27.4, புத்தன்அணை 14.4, தக்கலை 49.3, இரணியல் 8.4, பாலமோர்5.4, மாம்பழத்துறையாறு 37, கோழிப்போர்விளை 27, குருந்தன் கோடு 52, முள்ளங்கினாவிளை 57.8, ஆணைக்கிடங்கு 34.2.

Tags:    

Similar News