செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக மழை
- கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு, வெண்ணை உருண்டை பாறை, புலிக்குகை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் காணப்பட்டது.
- காஞ்சிபுரத்தில் 28.40 மி.மீட்டர் மழை பதிவானது.
செங்கல்பட்டு:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து உள்ளது. திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் விட்டு, விட்டு பலத்த மழை கொட்டியது.
மாமல்லபுரத்தில் 2-வது நாளாக இன்றும் காலையில் இருந்தே விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தங்களது படகு, வலைகளை உயரமான இடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். கடல் அலைகள் கடற்கரை ஓர கட்டிடங்கள் வரை வேகமாக வருவதால் கரையோரங்களில் உள்ள ஓட்டல், விடுதிகளில் கடல்நீர் புகும் நிலை உள்ளது.
விடுமுறைநாளான நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு, வெண்ணை உருண்டை பாறை, புலிக்குகை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் காணப்பட்டது. கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, கோவளம் சாலை பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருக்கழுக்குன்றத்தில் 48 மி.மீட்டர் மழை பதிவானது. செங்கல்பட்டில் 21 மி.மீட்டர், செய்யூர்-16மி.மீட்டர், கேளம்பாக்கம்-6.8மி.மீட்டர், மாமல்லபுரம்-38 மி.மீட்டர், மதுராந்தகம்-26மி.மீட்டர், திருப்போரூர்-6மி.மீட்டர், தாம்பரம்-2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
காஞ்சிபுரத்தில் நேற்று இரவு திடீரென பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக மேட்டு தெரு, டோல்கேட் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கியது. இன்று காலையும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. காஞ்சிபுரத்தில் 28.40 மி.மீட்டர் மழை பதிவானது. உத்தரமேரூரில்-10மி.மீட்டர், வாலாஜாபாத்-26.20மி.மீட்டர், ஸ்ரீபெரும்புதூர்-10.40மி.மீட்டர், செம்பரம்பாக்கம்-2மி.மீட்டர் மழை பெய்து உள்ளது.