- நகராட்சி பகுதிக்கு தேவையான கொசு மருந்துகளை திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் வாங்கி வந்தனர்.
- நகராட்சி ஆணையாளர் சையது உசேன் நேற்று பணி ஓய்வு பெற இருந்தார்.
புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த நகராட்சியின் ஆணையாளராக சையது உசேன் என்பவர் பணியாற்றினார்.
நகராட்சி பகுதிக்கு தேவையான கொசு மருந்துகளை திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் வாங்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு தேவையான 335 லிட்டர் கொசு மருந்துகளை திருச்சியில் உள்ள நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாகவும், அதற்காக ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 299 காசோலையாக செலுத்தப்பட்டதாகவும் நகராட்சி பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டது.
இதுபற்றி தெரியவந்ததும் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன், துணைத்தலைவர் சிதம்பரம் மற்றும் நகராட்சியின் உறுப்பினர்கள் நகராட்சி பயன்பாட்டுக்கு வாங்கப்பட்ட கொசு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? என அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கொசு மருந்து இல்லாததை கண்டுஅதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து நகராட்சி அதிகாரியிடம் கேட்டனர். அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இதையடுத்து நகராட்சி தலைவர் போலீசில் புகார் செய்தார். மேலும் இதுகுறித்து நகராட்சி உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து திருப்பூர் மண்டல நகராட்சி இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் சையது உசேன் நேற்று பணி ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் கொசு மருந்துகள் ஒரு வேனில் அவசரமாக கொண்டு வந்து அலுவலகத்தில் இறக்கி வைத்தனர். இதுகுறித்தும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஓய்வுபெறும் நாளில் நகராட்சி ஆணையாளர் சையது உசேன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதேபோல் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமாரும் இந்த முறைகேட்டில் சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஓய்வு பெறும் நாளில் நகராட்சி ஆணையாளர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.