உள்ளூர் செய்திகள்

புதுவையில் காய்ச்சல் தீவிரமாக பரவுகிறது- அரசு ஆஸ்பத்திரிகளில் அலைமோதிய நோயாளிகள்

Published On 2022-09-19 15:59 IST   |   Update On 2022-09-19 15:59:00 IST
  • அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
  • அரசு ஆஸ்பத்திரியில் வயதானவர்கள் பலர் சிகிச்சைக்காக வந்திருந்தனர்.

புதுச்சேரி:

புதுவையில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

இந்த காய்ச்சல் குழந்தைகள், சிறுவர்களை அதிகளவில் பாதிக்கிறது. இதனால் கல்வித்துறை புதுவை, காரைக்காலில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு வருகிற 25-ந் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.

அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதுவை அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று அதிகளவு கூட்டம் இருந்தது. ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளை தூக்கி வைத்து கொண்டு பெற்றோர் குவிந்திருந்தனர்.

காய்ச்சல் குறைவாக இருந்த குழந்தைகளுக்கு மருந்துகள் அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். கடுமையாக பாதிக்கப்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

அரசு ஆஸ்பத்திரியில் வயதானவர்கள் பலர் சிகிச்சைக்காக வந்திருந்தனர். இதேபோல அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல வழிமையங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்படடோர் அதிகளவில் வந்ததால் கூட்டம் அலைமோதியது.

காய்ச்சிய குடிநீரை பருகும்படியும், முககவசம் அணியும்படியும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இன்று புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 35, மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 508, காரைக்காலில் 16 பேர் என 559 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்திருந்தனர். நேற்று வரை 38 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தனர்.

இன்று அரசு ஆஸ்பத்திரியில் 31, மகளிர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 165, காரைக்காலில் 19 பேர் என 215 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News