பொழிச்சலூரில் மீன் வியாபாரி குத்திக்கொலை
- பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் பாண்டியன்.
- போலீஸ் விசாரணையில் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வந்தது.
தாம்பரம்:
பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். 45 வயதான இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு பொழிச்சலுர் பழைய பாபா தெருவில் வைத்து பாண்டியனுடன், 2 பேர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பாண்டியன் கத்தியால் குத்தப்பட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள். அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு பாண்டியன் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்த சங்கர்நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை வழக்கு பதிவு செய்து கொலை நடைபெற்ற இடத்துக்கு நேரில்சென்று விசாரித்தனர்.
அப்போது பாண்டியனை அவரது நண்பரான சிரஞ்சீவி, மற்றும்அரி ஆகியோர் குத்திக்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வந்தது.
கொலையுண்ட பாண்டியன், சிரஞ்சீவியின் மனைவியை பற்றி நேற்று முன்தினம் இரவு தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பாண்டியன், சிரஞ்சீவியின் வீட்டுக்கு கத்தியுடன் சென்று தகராறு செய்ததாக தெரிகிறது.
அப்போது வீட்டில் இருந்த சிரஞ்சீவியின் மனைவி இதுபற்றி கணவர் வந்தவுடன் தெரிவித்துள்ளர். இதனால் ஆத்திரம் அடைந்த சிரஞ்சீவி, நேற்று இரவு பாண்டியனை தேடிச்சென்று குத்திகொலை செய்திருப்பது தெரியவந்தது.