உள்ளூர் செய்திகள்

பொன்னேரி ரெயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை

Published On 2024-03-12 10:04 GMT   |   Update On 2024-03-12 10:04 GMT
  • பழ வியாபாரிகள் கூடையில் கொண்டு வரும் பழங்களை குரங்குகள் கூட்டமாக வந்து எடுத்து சென்று விடுகின்றன.
  • குரங்குகள் துரத்தும் போது பயணிகள் சிலர் தவறி கிழே விழும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

பொன்னேரி:

பொன்னேரி ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டையில் இருந்து சென்னைக்கு கவரப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், எண்ணூர், திருவொற்றியூர் வழியாக இரு மார்க்கத்திலும் தினமும் 40-க்கும் மேற்பட்ட புறநகர் ரெயில்கள் வந்து செல்கின்றன. பொன்னேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் தினமும் ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பொன்னேரி ரெயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து உள்ளது. 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் குடும்பத்துடன் அங்கு அட்டகாசம் செய்து வருகின்றன. ரெயில் நிலையத்திற்குள் வரும் பயணிகளை ரெயில் நிலையத்திற்கு நுழையும் போதே வாசல் அருகில் நின்று அச்சுறுத்துகின்றன. பயணிகள் பைகளில் கொண்டு வரும் பழங்கள், உணவு பொருட்களை பறித்து சென்று விடுகின்றன. இதனை தடுக்க முயன்றால் பயணிகளை குரங்குகள் கடிக்க பாய்கின்றன.

இதேபோல் பழ வியாபாரிகள் கூடையில் கொண்டு வரும் பழங்களை குரங்குகள் கூட்டமாக வந்து எடுத்து சென்று விடுகின்றன. இதனால் பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.

குரங்குகள் துரத்தும் போது பயணிகள் சிலர் தவறி கிழே விழும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே பொன்னேரி ரெயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News