உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலைகள் நாளை கரைப்பு: பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு கண்காணிப்பு

Published On 2023-09-23 09:36 GMT   |   Update On 2023-09-23 09:36 GMT
  • விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கரைக்கப்படுகிறது.
  • சிலைகளை கரைக்க வருபவர்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும், இருக்க வேண்டுமென போலீசார் தெரிவித்தனர்.

பொன்னேரி:

விநாயகர் சதுர்த்திவிழா கடந்த 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொன்னேரி, மீஞ்சூர், ஜனப்பசத்திரம், தச்சூர், திருப்பாலைவனம் மெதுர், சோழவரம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, ஆரணி, மணலி, பழவேற்காடு காட்டூர், அத்திப்பட்டு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகள் பழவேற்காடு கடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கரைக்கப்படுகிறது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண் பழவேற்காடு கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தார். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது, கடலில் ஒதுக்கப்பட்ட இடங்களில் சிலைகளை கரைப்பது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் தடுப்பு அமைத்து ரோந்து பணியில் ஈடுபடுவது, தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருப்பது, மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ், கடலில் பாதுகாப்பிற்காக மீனவர்கள் படகுடன் தயார் நிலையில் இருப்பது குறித்து ஆலோசனை செய்தார்.

டி.எஸ்.பி. கிரியாசக்தி தலைமையில் திருப்பாலைவனம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், பொன்னேரி இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

2 கண்காணிப்பு உயர் கோபுரம் அமைக்கப்பட்டு கண்காணித்து வருவதாகவும், பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் 10 தீயணைப்பு வீரர்கள் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாகவும், சிலைகள் வரும் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சிலைகளை கரைக்க வருபவர்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும், இருக்க வேண்டுமென போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News